நாய் (Dog)

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.
நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.
உயிரியல் பாகுபாட்டியல்
உயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த "நான்கு கால்கள்" கொண்டவை ("quadruped") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய canis என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை Canis vulpes என்றும், ஓநாய் என்பதை Canis lupus என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை Canis canis என்று குறிப்பிட்டிருந்தார்.
பின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த Canis canis என்பதை நீக்கிவிட்டார், ஆனால் "நான்குகால்கள்" ("quadruped") விலங்குகளின் குழுவில் Canis என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத aegyptius (தோல்நாய்கள்), aquaticus எனப்படும் "நீர்மீட்பு நாய்கள்", mustelinus எனப்படும் "குட்டைக்கால் நாய்கள்" அல்லது "பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் Canis domesticus என்று அழைக்கப்படும் வீட்டு நாய் என்பதும், Canis familiaris, நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.
(more details)wikipedia
No comments:
Post a Comment